அருட்கவி – சிவப்பிரகாசர்

சைவ இலக்கியத்திற்கு அரும்பாடுபட்ட ஆன்மீக அறிஞர்களுள் முக்கியமானவர் சிவப்பிரகாசர். தமிழில் இவர் இயற்றிய “”பிரபுலிங்க லீலை” என்ற நூல், இன்றும் இவருக்கு பெருமை சேர்த்து வருகிறது.
இந்நூலுக்கு பல தமிழறிஞர்களும் சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட அன்பர்களும் உரை எழுதியுள்ளனர்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் பிறந்த சிவப்பிரகாசர், பிறகு பெற்றோருடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அப்போது அம்மலையில் வாழ்ந்த “”குருதேவர்” என்ற யோகியுடன் பழகி, பயின்று, ஞானதீட்சை பெற்ற சிவப்பிரகாசர், ஒருநாள் மாலை மலைவலம் (கிரிவலம்) செய்வதற்காகச் சென்றார். மனதுக்குள் ஒரு புது நூல் பாடலாக உருவெடுத்தது. மலை வலம் முடித்து வந்து ஒரே மூச்சில் ஒரு நூலை எழுதி முடித்தார். அதுவே, அண்ணாமலையார் புகழ்பாடும் சோணசைல மாலை.

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் என்பவர், தமிழ் இலக்கண அறிவுமிக்கவராக இருக்கிறார் என்று கேள்வியுற்று, அவரிடம் சென்று தமிழிலக்கணம் கற்றார் சிவப்பிரகாசர்.

பின்னர், திருச்செந்தூர் வந்து முருகப் பெருமானை வழிபட்டார். கோவிலை வலம் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த போலிப்புலவர் ஒருவர் சிவப்பிரகாசரைக் காட்டி, “”யார் இவர் ?” என பிறரிடம் விசாரித்தார். “”சிந்துபூந்துறை வெள்ளியம்பல வாணத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றவர்” என்று கூறினார், போலிப்புலவர்.
“”வெள்ளியம்பல வாணனுக்கே தமிழ் இலக்கணம் பற்றி ஒன்றும் தெரியாது. அவரிடம் பயின்ற இவருக்கு என்ன தெரிந்திருக்கும் ?” என்று ஏளனமாகக் கூறினார்.
சிவப்பிரகாசர் இதைக் கேட்டுக் கோபமுற்று,””நாமிருவரும் சொற்போர் புரிவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாம். தோற்றவர், வென்றவருக்கு அடிமை ! சம்மதமா ?” என்று வாதுக்கு அழைத்தார்.

சிலர் நடுவர்களாக அமர்த்தப்பட்டனர்.

இருவரும் பாடத் தொடங்கினர்.

சிறிது நேரத்துக்குள் சிவப்பிரகாசர் முப்பது பாடல்களைப் பாடி முடித்துவிட்டார். போலிப்புலவருக்கோ முதற்பாட்டு கூட முடிவு பெறவில்லை. தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவப்பிரகாசர் அவரை மன்னித்து, “”இனிமேல் எனது குருநாதரைப் பற்றிக் குறையாகப் பேச வேண்டாம்” என்று எச்சரித்து அனுப்பினார்.
பின்னர், சிவப்பிரகாசர் தில்லையை அடைந்து கூத்தபிரானைப் போற்றி வழிபட்டு, “”நால்வர் நான் மணிமாலை”, “”சிவப்பிரகாசம்”, “”சதமணிமாலை” ஆகிய அருந்தமிழ் நூல்களை அத்தலத்தில் இருந்தபடியே இயற்றி முடித்தார்.

காஞ்சிபுரம் சென்று சில காலம் தங்கியிருந்தார் சிவப்பிரகாசர். அக்காலத்தில் அவர் இயற்றியதே “”பிரபுலிங்க லீலை”, “”சித்தாந்த சிகாமணி”, “”வேதாந்த சூடாமணி” ஆகிய நூல்கள். திருக்கூவம் தலத்தின் மீதுள்ள தலபுராணமும் இவர் பாடியதே.

பிறகு விருத்தாலத்திற்கு அழைக்கப்பட்டார். விருத்தாச்சலத்தின் தொன்மை பெயர் பழமலை. சிதம்பர பூபதி என்பவர் இத்தலத்தில் சிவப்பிரகாசருக்கு ஒரு திருமடம் அமைத்துக் கொடுத்து தமிழ்த்தொண்டு செய்யக் கோரினார். தமிழால் சிவத்தொண்டு புரியும் சிவப்பிரகாசர் அவ்வாறே அவ்வூரில் தங்கியிருந்து அத்தலத்து பெருமான் மீது “”பழமலைஅந்தாதி”, “”பிட்சாடன நவமணி மாலை”, “”பெரிய நாயகி விருத்தம்” ஆகிய நூல்களைப் பாடினார்.

“”திருக்காளத்தி புராணம்” என்னும் நூலை இயற்றிக் கொண்டிருந்த சிவப்பிரகாசர் அது முடியும் முன்பாகவே,
தனது முப்பத்திரண்டாம் வயதில் இறைவன் திருவடி எய்தினார்.


Comments are disabled.