Category Archives: Uncategorized

பஞ்சபூத சிவதலங்கள்

இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது. இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும் வல்லமையும், காக்கும் வல்லமையும், அழிக்கும் வல்லமையும் உண்டு. இந்த சிவசக்திகளை சமஸ்கிருத மொழியில் பிருதிவி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(வளி), ஆகாசம்(வான்) என அழைக்கின்றார்கள். இவற்றின் வல்லமையை கருத்தில் கொண்டு ஐம்பெரும்சக்திகள் என்று தமிழில் அழைப்பதைப் போல சமஸ்கிருதத்தில் பஞ்சபூதங்கள் என்று வழங்குகிறார்கள். இறைவனான சிவபெருமான் பஞ்ச பூதங்களாக அருள்புரியும் தென் இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாகும்.

1) பிருத்விதலம் –

01

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் அல்லியங்கோதை திருக்கோயில் பிருத்விதலமாகும். சுந்தர மூர்த்தி நாயனார் நட்பு கொண்டவர், அப்பர் சுவாமிகளால் பாடல்பெற்றவர் தியாகராஜர். பிருத்வி என்றால் மண்ணாகும். இங்குள்ள இறைவனை பிருத்விலிங்கம் என்றும், புற்றுமண்ணால் ஆன லிங்கரூபாக இறைவன் இருக்கிறார் என்பதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.

2) அப்புதலம் –

02

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஐம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அப்புதலமாகும். இத்திருக்கோயில் திருவானைக்காவல் என்றும் அழைக்கப்பெறுகிறது. அப்பு என்றால் நீராகும். உமையம்மை ஈசனை வணங்க நீரைக் கொண்டு லிங்கம் செய்தார், இந்த லிங்கம் அப்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் நீர்வடிவான அப்புலிங்கமாக தோன்றி அருள் செய்த தலம் இது.

3) தேயுதலம் –

03

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மை திருக்கோயில் தேயுதலமாகும். தேயு என்றால் நெருப்பாகும். பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவன் என்று போர் நிகழந்த போது, அடிமுடி காணமுடியாத நெருப்பாக உயர்ந்து தானே பெரியவன் என்று சிவபெருமான் உணர்த்தினார். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன் நெருப்பாக தோன்றி அருள் செய்த தலம் இது.

4) வாயுதலம் –

வாயுதலம்

வாயுதலம்

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை திருக்கோயில் வாயுதலமாகும். சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம். இந்த உயிர்களின் பெயரான ஸ்ரீ (சிலந்தி), காள (பாம்பு), ஹஸ்தி (யானை) என்று அழைப்படுகிறார். இறைவன் வாயுலிங்கமாக காட்சி தரும் தலம் இது.

5) ஆகாசதலம் –

ஆகாசதலம்

ஆகாசதலம்

தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள நடராசர் சிவகாமியம்மை திருக்கோயில் ஆகாசதலமாகும். நடராஜர் கோலத்தில் உலகில் ஐந்தொழில் செய்யும் திருக்கோலத்தில் சிவபெருமான் இருக்கிறார். மாணிக்கவாசரின் பாடலை எழுதி சிற்றம்பலத்தான் என இறைவனே கையெழுத்து இட்டு அருள் செய்த தலம். சித் என்றால் அறிவு, அம்பரம் என்று வெளி,. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஆகாயமாக அருள் தரும் தலம் இது.