சிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்

சக்தி, பெருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேரு பெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன. கீழே உயர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.

சிங்கம் – திருநல்லூர்
யானை – திருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி
காளை – திருவையாறு
பசு – ஆவூர், செய்யாறு, ஆவடுதுறை, கரூர், பட்டீஸ்வரம்
குதிரை – சீயாத்தமங்கை
ஆடு – திருவாடானை
பன்றி – சிவபுரம்
கழுதை – கரவீரம்
குரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்
முயல் – திருப்பாதிரிப் புலியூர்
நாரை – நாரையூர், மதுரை
கரிக்குருவி – மதுரை, வலிவலம்
மயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்
கருடன் (ஜடாயு) – வைத்தீஸ்வரன், சிறுகுடி
நண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்
வண்டு – திருசைலம், திருண்டுறை, வாழ்கொளிபுத்தூர்
தேனீ – நன்னிலம்
ஆமை – திருமணஞ்சேரி
எறும்பு – திருவெறும்பூர்
பாம்பு – காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம்
சிலந்தி – ஆனைக்கா
எலி – திருமறைக்காடு
ஈ – திருஈங்கோய் மலை


பஞ்சபூத சிவதலங்கள்

இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது. இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும் வல்லமையும், காக்கும் வல்லமையும், அழிக்கும் வல்லமையும் உண்டு. இந்த சிவசக்திகளை சமஸ்கிருத மொழியில் பிருதிவி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(வளி), ஆகாசம்(வான்) என அழைக்கின்றார்கள். இவற்றின் வல்லமையை கருத்தில் கொண்டு ஐம்பெரும்சக்திகள் என்று தமிழில் அழைப்பதைப் போல சமஸ்கிருதத்தில் பஞ்சபூதங்கள் என்று வழங்குகிறார்கள். இறைவனான சிவபெருமான் பஞ்ச பூதங்களாக அருள்புரியும் தென் இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாகும்.

1) பிருத்விதலம் –

01

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் அல்லியங்கோதை திருக்கோயில் பிருத்விதலமாகும். சுந்தர மூர்த்தி நாயனார் நட்பு கொண்டவர், அப்பர் சுவாமிகளால் பாடல்பெற்றவர் தியாகராஜர். பிருத்வி என்றால் மண்ணாகும். இங்குள்ள இறைவனை பிருத்விலிங்கம் என்றும், புற்றுமண்ணால் ஆன லிங்கரூபாக இறைவன் இருக்கிறார் என்பதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.

2) அப்புதலம் –

02

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஐம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அப்புதலமாகும். இத்திருக்கோயில் திருவானைக்காவல் என்றும் அழைக்கப்பெறுகிறது. அப்பு என்றால் நீராகும். உமையம்மை ஈசனை வணங்க நீரைக் கொண்டு லிங்கம் செய்தார், இந்த லிங்கம் அப்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் நீர்வடிவான அப்புலிங்கமாக தோன்றி அருள் செய்த தலம் இது.

3) தேயுதலம் –

03

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மை திருக்கோயில் தேயுதலமாகும். தேயு என்றால் நெருப்பாகும். பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவன் என்று போர் நிகழந்த போது, அடிமுடி காணமுடியாத நெருப்பாக உயர்ந்து தானே பெரியவன் என்று சிவபெருமான் உணர்த்தினார். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன் நெருப்பாக தோன்றி அருள் செய்த தலம் இது.

4) வாயுதலம் –

வாயுதலம்

வாயுதலம்

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை திருக்கோயில் வாயுதலமாகும். சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம். இந்த உயிர்களின் பெயரான ஸ்ரீ (சிலந்தி), காள (பாம்பு), ஹஸ்தி (யானை) என்று அழைப்படுகிறார். இறைவன் வாயுலிங்கமாக காட்சி தரும் தலம் இது.

5) ஆகாசதலம் –

ஆகாசதலம்

ஆகாசதலம்

தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள நடராசர் சிவகாமியம்மை திருக்கோயில் ஆகாசதலமாகும். நடராஜர் கோலத்தில் உலகில் ஐந்தொழில் செய்யும் திருக்கோலத்தில் சிவபெருமான் இருக்கிறார். மாணிக்கவாசரின் பாடலை எழுதி சிற்றம்பலத்தான் என இறைவனே கையெழுத்து இட்டு அருள் செய்த தலம். சித் என்றால் அறிவு, அம்பரம் என்று வெளி,. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஆகாயமாக அருள் தரும் தலம் இது.


அகத்தியர் கதை – சித்தமெல்லாம் சிவமயம்

அகத்தியர்

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார்
என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும்  குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை  மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய
சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும்
உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள்
உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “*அகத்தியம்*” என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக்
கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம்
முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை
ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.

*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
**
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக்
கூறப்படுகிறது.


இதயமே இல்லாதவர் – சிவதாத்தா கதைகள் – 1

அன்பானவன் எடுத்த அவதாரங்கள் ஏராளம். இந்த சிவதாத்தாவும் அதிலொன்றாக, “எல்லாம் சிவன் செயல்!” வாசகர்களுக்காக, என் சிவன் எடுக்கும் அவதாரம்.

கொல்லிமலைக்கு அருகில் இருக்கும் பசுமை கொஞ்சும் கிராமம் அது. மலையிலிருந்து இறங்கிய சிவதாத்தா தன் தாடியை வருடிய படி கிராமத்திற்குள் நுழைந்தார். உழைத்து உழைத்தே உறுதியான உடல், எட்டடிக்கு முன்னால் வருகின்றவரையே அளந்துவிடும் பார்வை, முகத்தை மறைத்துநிற்கும் தாடி மீசைக்குள் எப்போதும் சிறு புன்னகை. இதுதான் சிவதாத்தா.

சிவதாத்தாவை கிராமத்தின் நுழைவுவாயிலில் கம்பீனமான தோற்றத்துடன் முனீஸ்வரன் வரவேற்றான். எல்லை காவல்தெய்வமான அவன் அனுமதியின்றி கிரமத்திற்குள் யாரும் நுழைய முடியாது. சிவதாத்தா அவனை வணங்கிவிட்டு, சாம்பலை எடுத்துப் பூசினார்.

இனி இந்த கிராமத்தில் தான் வேலை என மனதுக்குள் சொல்லிக்கொண்டு, அருகில் யாரேனும் தென்படுகின்றார்களா என பார்வையை செலுத்தினார். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பரமனைக் கண்டார். மெதுவாக அவனை நோக்கி அடியெடுத்து வைக்களானார். அவருடைய வருகையை கவணித்த பரமன், அவரிடம் ஓடினான்.

“தம்பி, உன்னுடைய முதலாளியை சந்திப்பதற்காக கொல்லிமலையில் இருந்து வருகிறேன். வா என்னுடன்” என்றார்.

“ஐயா ஆடுகள் மேய்கிறதே, அவைகளை விட்டுவிட்டு எப்படி வருவது”

“இதோ இங்கே இருக்கானே முனி, அவன் பார்த்துக் கொள்வான். வா என்னுடன் ” என்று சொல்ல, பரமனுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அவன் சிவதாத்தாவை முதலாளியிடம் கூட்டிச் சென்றான்.

கொல்லிமலைச் சித்தர் ஒருவர் முதலாளியை காப்பாற்ற வந்திருக்கின்றார் என தெரிந்து கொண்டு, வழியிலேயே அவரை மக்கள் தடுத்தனர்.

“உயிர் வலியோடு துடித்துக் கொண்டிருக்கும் எதிரிக்கும் அருள் செய்வதே, அவனுக்கு தரும் பெரும் தண்டனை. அதைக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். ” என்றார் சிவதாத்தா.

“சித்தரே, அவனுக்கு இதயமே இல்லை. அவனைக் காப்பாற்றி எங்களுக்கு தீமை செய்து வீடாதீர்கள் ” என்றார் கூட்டத்திலிருந்த ஒரு முதியவர்.

“இதயமில்லாதவன் என்றால் என்றோ அவன் இறந்துவிட்டான். அந்தப் பிணத்திற்கு புது உயிர் கொடுக்கவே வந்துள்ளேன். நோயுற்றிருப்பது ஒரு உயிர் என்பதை மறந்து, நீங்களும் பாவத்தினை சேர்த்துக் கொள்ளாதார்கள் ” என்று சித்தர் சொல்லவும், எல்லோரும் அமைதியாக வழிவிட்டார்கள்.

முதலாளியின் மனைவி அவரை வரவேற்றாள். பரமன் அவளிடம் முதலாளியை காண வந்திருப்பதாக சொல்லவும், அவளுக்கு முதலில் புரியவில்லை. கொல்லிமலையிலிருந்து வந்திருக்கிறார் என்றவுடனே, அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சாந்தம் தவழும் சிவதாத்தாவை வணங்கி “ஐயனே, தங்களைப் பார்த்தால் சித்தர் போல இரு்கிறது. என் கணவன் பல மாதங்களாய் கடும் நோயால் அவதிப்படுகின்றார். தாங்கள் தான் தயவு செய்து காப்பாற்ற வேண்டும் ” என மன்றாடினாள்.

“பெண்ணே, கணவன் வழிதவறும் போது, கண்டிப்பதற்கான உரிமை உன்னிடம் இருக்கிறது என்பதை மறவாதே!. இத்தனை துன்பங்களுக்கும் தீர்வு உன் எண்ண வெளிபாடுகலிருந்தே கிடைக்கிறது” என்றபடி சிவதாத்தா முதாலாளியின் அறைக்கு சென்றார்.

“உன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்த்தினால், நீ இன்பமாக இருக்கலாம். உன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளம் நோக நீ நடந்து கொண்டாய் அதனால் அவர்கள் உன்னை சபித்தார்கள். அந்தப் பலனை இப்போது அனுபவிக்கின்றாய்!”

முதலாளியின் கைகளில் சாம்பலைக் கொடுத்து, “தினமும் இதை இடு, அப்போதெல்லாம் இதைப் போல நானும் சாம்பலாக போயிருக்க வேண்டியவன். இனிப் போகப் போகிறவன். வாழும் குறைந்த நாட்களிலாவது உடனிருப்பவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் இருக்கட்டும்.” என்று சொல்லி வெளியேறினார்.

திருநீர் அணிவதன் தத்துவம் –

இந்த உடல் எப்போது வேண்டுமானாலும் சாம்பலாகலாம். உயிர் வாழும் காலத்திலாவது மற்ற உயிர்களுக்கு இன்பம் தர வேண்டும் என நினைக்கவே உடலெங்கும் சாம்பலை அணிகின்றார்கள் சைவர்கள்.


திருமுருக கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார்

பெற்றோரும் பிறப்பும் –

“அருள்மொழி அரசு’ என்றும் “திருப்புகழ் ஜோதி’ என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அவதரித்தார். செங்குந்த வீர சைவ மரபினர். தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். அன்னையார் கனகவல்லி அம்மையார்.

தமிழோடு தவழ்தல் –

வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் தேவாரம், நளவெண்பா, ஒüவையாரது நூல்கள், திருப்புகழ்க் கீர்த்தனைகள் முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார். பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அதுதான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

இசைப் பயணம் –

வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது “இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கி கெüரவித்தார்கள்.

சொற்பொழிவு திறன் –

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி’ பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர்.

சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு “”இதுகாறும் இதனை அறிந்திலமே” என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள். “”வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன” என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள்.

சிறப்பியல்பு –

மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.

அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

தமிழ்த் திருப்பணி –

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

இயற்றிய நூல்கள் –

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார்.

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

எல்லாம் இலக்கியம் –

கவிதை, கட்டுரை, கதை, காவியம் ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும் இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர் கூறுவர். மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும் பிரசங்கங்களும் உபந்யாசங்களும்கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.

ஆன்மீகத்தில் ஞானம் –

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால், ஞானாசிரியராகவும், மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும் விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்.

மறைவு –

1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே தம்முடைய வழிபடு தெய்வமாகிய இளம்பூரணன் இணையடிகளில் இரண்டறக் கலந்து, பூதவுடல் நீத்துப் புகழுடம்பெய்தினார்.

சொற்பொழிவைக் கேட்க –

கேட்கக் கேட்கத் திகட்டாத சொற்பொழிவு நமது வாரீயாருடையது.

திருப்புகழ் அருளிய அருணகரிநாதர் பற்றி திரு முருக கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவைக் கேட்க இங்கு சொடுக்கவும்.


சித்தமெல்லாம் சிவமயம் – 108 சித்தர்களின் பெயர்கள்

சித்தர்கள் –

தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.

சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன்.

சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் காலமும் தேவைப்பட்டது. நான் படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டவைகளை ஒரு குட்டி தொடராகவே எழுதுவது என தீர்மானித்தேன்.அந்த தொடரின் முதல் பகுதியாக சித்தர் பாடல்கள் வெளிவந்தன. இப்போது அந்த சித்தர்களின் மகிமைகளைப் பற்றியும் எழுதுகிறேன். இந்த தொடர் வெற்றிகரமாக அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

உண்மைச் செய்தி –

பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.

பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்

அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி

வேறுபாடுகள் அற்றவர்கள் –

இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.

அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.

இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.

108 சித்தர்களின் பெயர்கள் –

நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.

1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.

ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.


அருட்கவி – சிவப்பிரகாசர்

சைவ இலக்கியத்திற்கு அரும்பாடுபட்ட ஆன்மீக அறிஞர்களுள் முக்கியமானவர் சிவப்பிரகாசர். தமிழில் இவர் இயற்றிய “”பிரபுலிங்க லீலை” என்ற நூல், இன்றும் இவருக்கு பெருமை சேர்த்து வருகிறது.
இந்நூலுக்கு பல தமிழறிஞர்களும் சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட அன்பர்களும் உரை எழுதியுள்ளனர்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் பிறந்த சிவப்பிரகாசர், பிறகு பெற்றோருடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அப்போது அம்மலையில் வாழ்ந்த “”குருதேவர்” என்ற யோகியுடன் பழகி, பயின்று, ஞானதீட்சை பெற்ற சிவப்பிரகாசர், ஒருநாள் மாலை மலைவலம் (கிரிவலம்) செய்வதற்காகச் சென்றார். மனதுக்குள் ஒரு புது நூல் பாடலாக உருவெடுத்தது. மலை வலம் முடித்து வந்து ஒரே மூச்சில் ஒரு நூலை எழுதி முடித்தார். அதுவே, அண்ணாமலையார் புகழ்பாடும் சோணசைல மாலை.

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் என்பவர், தமிழ் இலக்கண அறிவுமிக்கவராக இருக்கிறார் என்று கேள்வியுற்று, அவரிடம் சென்று தமிழிலக்கணம் கற்றார் சிவப்பிரகாசர்.

பின்னர், திருச்செந்தூர் வந்து முருகப் பெருமானை வழிபட்டார். கோவிலை வலம் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த போலிப்புலவர் ஒருவர் சிவப்பிரகாசரைக் காட்டி, “”யார் இவர் ?” என பிறரிடம் விசாரித்தார். “”சிந்துபூந்துறை வெள்ளியம்பல வாணத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றவர்” என்று கூறினார், போலிப்புலவர்.
“”வெள்ளியம்பல வாணனுக்கே தமிழ் இலக்கணம் பற்றி ஒன்றும் தெரியாது. அவரிடம் பயின்ற இவருக்கு என்ன தெரிந்திருக்கும் ?” என்று ஏளனமாகக் கூறினார்.
சிவப்பிரகாசர் இதைக் கேட்டுக் கோபமுற்று,””நாமிருவரும் சொற்போர் புரிவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாம். தோற்றவர், வென்றவருக்கு அடிமை ! சம்மதமா ?” என்று வாதுக்கு அழைத்தார்.

சிலர் நடுவர்களாக அமர்த்தப்பட்டனர்.

இருவரும் பாடத் தொடங்கினர்.

சிறிது நேரத்துக்குள் சிவப்பிரகாசர் முப்பது பாடல்களைப் பாடி முடித்துவிட்டார். போலிப்புலவருக்கோ முதற்பாட்டு கூட முடிவு பெறவில்லை. தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவப்பிரகாசர் அவரை மன்னித்து, “”இனிமேல் எனது குருநாதரைப் பற்றிக் குறையாகப் பேச வேண்டாம்” என்று எச்சரித்து அனுப்பினார்.
பின்னர், சிவப்பிரகாசர் தில்லையை அடைந்து கூத்தபிரானைப் போற்றி வழிபட்டு, “”நால்வர் நான் மணிமாலை”, “”சிவப்பிரகாசம்”, “”சதமணிமாலை” ஆகிய அருந்தமிழ் நூல்களை அத்தலத்தில் இருந்தபடியே இயற்றி முடித்தார்.

காஞ்சிபுரம் சென்று சில காலம் தங்கியிருந்தார் சிவப்பிரகாசர். அக்காலத்தில் அவர் இயற்றியதே “”பிரபுலிங்க லீலை”, “”சித்தாந்த சிகாமணி”, “”வேதாந்த சூடாமணி” ஆகிய நூல்கள். திருக்கூவம் தலத்தின் மீதுள்ள தலபுராணமும் இவர் பாடியதே.

பிறகு விருத்தாலத்திற்கு அழைக்கப்பட்டார். விருத்தாச்சலத்தின் தொன்மை பெயர் பழமலை. சிதம்பர பூபதி என்பவர் இத்தலத்தில் சிவப்பிரகாசருக்கு ஒரு திருமடம் அமைத்துக் கொடுத்து தமிழ்த்தொண்டு செய்யக் கோரினார். தமிழால் சிவத்தொண்டு புரியும் சிவப்பிரகாசர் அவ்வாறே அவ்வூரில் தங்கியிருந்து அத்தலத்து பெருமான் மீது “”பழமலைஅந்தாதி”, “”பிட்சாடன நவமணி மாலை”, “”பெரிய நாயகி விருத்தம்” ஆகிய நூல்களைப் பாடினார்.

“”திருக்காளத்தி புராணம்” என்னும் நூலை இயற்றிக் கொண்டிருந்த சிவப்பிரகாசர் அது முடியும் முன்பாகவே,
தனது முப்பத்திரண்டாம் வயதில் இறைவன் திருவடி எய்தினார்.


பசிப்பிணி அகற்றும் வள்ளல் திருவருட் பிரகாச வள்ளலார்

சிவனடியார்கள் கதையை எழுத வேண்டும் என நினைத்த போது என் நினைவுக்கு வந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் திருவருட் பிரகாச வள்ளலார், இரண்டாமவர் காரைக்கால் அம்மையார், மூன்றாமவர் கண்ணப்பர்.

இவர்கள் மூவரும் நினைவுக்கு வர முக்கிய காரணம் ஒன்றுன்று அது,. பசி.

வள்ளல் பெருமான் பெருமை –

பதவுரை, பொருளுரை தேவைப்படாத எளிமையா பாடல்களை எழுதியவர்.

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்று பாடல்களில் நேர்மறை எண்ணங்களை புகுத்தியவர்.

கருணையின் உச்சமாக, ‘வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்’ என்று சொன்னவர்.

ஏனைய நாட்களிலும் பசியாற்றுவித்தல் நடந்தாலும், தைப்பூச திருநாள் அன்று வடலூரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பசியாற்றுவித்தல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

கோரமான பசியிலிருந்து மனிதனை காக்க சிவன் எடுத்த அவதாரமாகவே வள்ளலாரை சைவர்கள் கருதுகின்றார்கள்.

இராமலிங்க அடிகள் பிறப்பும் வளர்ப்பும் –

தில்லை எனப்படும் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில், சைவ தம்பதிகளான இராமையாபிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக அக்டோபர் 5, 1823 ல் பிறந்தார். இயற்பெயர் இராமலிங்கம். சபாபதி, பரசுராமர் என்ற அண்ணன்மார்களும், உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற அக்காமார்களும் உண்டு.

தாங்கள் சாப்பிடும் முன் அடியவர் யாருக்காவது உணவிட்டு மகிழ்வித்தல் சைவர்களின் பண்பு. வள்ளல் பெருமானின் அன்னை சின்னம்மாளும் தினமும் அடியவர்களுக்கு உணவிடுதலை வழக்கமாக கொண்டிருந்தார். நாளும் ஈசனை நினைத்து உருகும் குடும்பம் என்பதால் வள்ளலாருக்கு இளம் பருவத்திலேயே, பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் குணம் இருந்தது.

கல்வி –

மூத்த அண்ணன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தனர். சபாபதியே, தம்பி ராமலிங்கத்துக்குக் கல்வி கற்பித்தார். பிறகு, தான் பயின்ற காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயில அனுப்பினார்.

ஆசானான முருகன் –

ஒருகட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சியடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

ஒன்பது வயதில் –

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்துவந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம்.

அன்னையாக வந்தான் அர்த்தநாரி –


ஒரு நாள் வள்ளலார் மிகுந்த பசியோடு திண்ணையில் படுத்திருந்தார். தினம் தினம் அடியார்களுக்கு உணவு படைத்திடும் அன்னையின் குழந்தைக்கு பசியெடுப்பதனால், சிவனே அன்னையாக மாறி உணவு படைத்திட்டான்.

குழந்தைக்கு பசிக்குமேயென உண்மையான அன்னை வந்து உணவு படைக்க, அன்னையே இப்போது தானே உங்கள் கையால் உணவு உண்டேன் என இராமலிங்கம் தடுமாற, வந்தது உயிர்களுக்கெல்லாம் உணவு படைக்கும் ஈசன் என எல்லோருக்கும் புரிந்தது.

முதல் ஜோதி –

பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார்.

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.

அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந் தார். விளக்கில் ஒளி மங்கும்போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!

சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம் –

கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு ராமலிங்கம்
“சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.

கொள்கைகள் –

கடவுள் ஒருவரே.

கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.

சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.

மாமிச உணவை உண்ணக்கூடாது.

ஜாதி, மத வேறுபாடு கூடாது.

பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.

பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

பசியாற்றுவி்த்தல் –


எல்லா உயிர்களுக்கும் பசியாற்றுவிக்கும் ஈசனின் செயலை வள்ளலாரும் செய்ய எண்ணம் கொண்டார்.

கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867|ஆம் ஆண்டு, மே மாதம் 23&ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே “சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்தார்.


இராவணன் தமிழன்

இராவண்ணன் –

இரா – இரவு.

வண்ணன் – நிறம் பொருந்தியவன்.

இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள். பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணரமுடியவில்லை.

இராவணன் தமிழன் –

ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம். ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன. இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்துவருகிறது… இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.

ஆதாரத்தின் சுருக்கம் –

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப்படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம்[வானூர்தி] போன்றவற்றைக் கண்டுபிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே

ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004] குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

ராவண காவியம் –

ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது. கம்பனின் சொல்வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் தி.க வினரும் இதை கவணத்தில் கொள்வதில்லை.

இதன் சாராம்சத்தில்…

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.

எனக் குறிப்படப்பட்டுள்ளது.

இராவண காவியத்தை பற்றி மேலும் அறிய ராவணன் கதாநாயகனா காமக் கொடூரனா? படியுங்கள்.


சர்வம் சிவமயம்!

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க !
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க !
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க !

சைவ நெறி தளைத்தோங்க அமைக்கப்பட்ட வலைப்பூ இது. இந்த வலைப்பூவில் சிவனைத் தவிற எதுவும் இருக்காது. ஏனென்றால் எல்லாம் சிவனுள் அடக்கம்.

சம்போ சிவ சம்போ!.

– ஜெகதீஸ்வரன்.ந