Tag Archives: சிவன்

திருமுருக கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார்

பெற்றோரும் பிறப்பும் –

“அருள்மொழி அரசு’ என்றும் “திருப்புகழ் ஜோதி’ என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அவதரித்தார். செங்குந்த வீர சைவ மரபினர். தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். அன்னையார் கனகவல்லி அம்மையார்.

தமிழோடு தவழ்தல் –

வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் தேவாரம், நளவெண்பா, ஒüவையாரது நூல்கள், திருப்புகழ்க் கீர்த்தனைகள் முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார். பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அதுதான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

இசைப் பயணம் –

வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது “இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கி கெüரவித்தார்கள்.

சொற்பொழிவு திறன் –

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி’ பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர்.

சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு “”இதுகாறும் இதனை அறிந்திலமே” என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள். “”வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன” என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள்.

சிறப்பியல்பு –

மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.

அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

தமிழ்த் திருப்பணி –

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

இயற்றிய நூல்கள் –

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார்.

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

எல்லாம் இலக்கியம் –

கவிதை, கட்டுரை, கதை, காவியம் ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும் இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர் கூறுவர். மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும் பிரசங்கங்களும் உபந்யாசங்களும்கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.

ஆன்மீகத்தில் ஞானம் –

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால், ஞானாசிரியராகவும், மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும் விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்.

மறைவு –

1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே தம்முடைய வழிபடு தெய்வமாகிய இளம்பூரணன் இணையடிகளில் இரண்டறக் கலந்து, பூதவுடல் நீத்துப் புகழுடம்பெய்தினார்.

சொற்பொழிவைக் கேட்க –

கேட்கக் கேட்கத் திகட்டாத சொற்பொழிவு நமது வாரீயாருடையது.

திருப்புகழ் அருளிய அருணகரிநாதர் பற்றி திரு முருக கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவைக் கேட்க இங்கு சொடுக்கவும்.


அருட்கவி – சிவப்பிரகாசர்

சைவ இலக்கியத்திற்கு அரும்பாடுபட்ட ஆன்மீக அறிஞர்களுள் முக்கியமானவர் சிவப்பிரகாசர். தமிழில் இவர் இயற்றிய “”பிரபுலிங்க லீலை” என்ற நூல், இன்றும் இவருக்கு பெருமை சேர்த்து வருகிறது.
இந்நூலுக்கு பல தமிழறிஞர்களும் சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட அன்பர்களும் உரை எழுதியுள்ளனர்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் பிறந்த சிவப்பிரகாசர், பிறகு பெற்றோருடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அப்போது அம்மலையில் வாழ்ந்த “”குருதேவர்” என்ற யோகியுடன் பழகி, பயின்று, ஞானதீட்சை பெற்ற சிவப்பிரகாசர், ஒருநாள் மாலை மலைவலம் (கிரிவலம்) செய்வதற்காகச் சென்றார். மனதுக்குள் ஒரு புது நூல் பாடலாக உருவெடுத்தது. மலை வலம் முடித்து வந்து ஒரே மூச்சில் ஒரு நூலை எழுதி முடித்தார். அதுவே, அண்ணாமலையார் புகழ்பாடும் சோணசைல மாலை.

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் என்பவர், தமிழ் இலக்கண அறிவுமிக்கவராக இருக்கிறார் என்று கேள்வியுற்று, அவரிடம் சென்று தமிழிலக்கணம் கற்றார் சிவப்பிரகாசர்.

பின்னர், திருச்செந்தூர் வந்து முருகப் பெருமானை வழிபட்டார். கோவிலை வலம் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த போலிப்புலவர் ஒருவர் சிவப்பிரகாசரைக் காட்டி, “”யார் இவர் ?” என பிறரிடம் விசாரித்தார். “”சிந்துபூந்துறை வெள்ளியம்பல வாணத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றவர்” என்று கூறினார், போலிப்புலவர்.
“”வெள்ளியம்பல வாணனுக்கே தமிழ் இலக்கணம் பற்றி ஒன்றும் தெரியாது. அவரிடம் பயின்ற இவருக்கு என்ன தெரிந்திருக்கும் ?” என்று ஏளனமாகக் கூறினார்.
சிவப்பிரகாசர் இதைக் கேட்டுக் கோபமுற்று,””நாமிருவரும் சொற்போர் புரிவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாம். தோற்றவர், வென்றவருக்கு அடிமை ! சம்மதமா ?” என்று வாதுக்கு அழைத்தார்.

சிலர் நடுவர்களாக அமர்த்தப்பட்டனர்.

இருவரும் பாடத் தொடங்கினர்.

சிறிது நேரத்துக்குள் சிவப்பிரகாசர் முப்பது பாடல்களைப் பாடி முடித்துவிட்டார். போலிப்புலவருக்கோ முதற்பாட்டு கூட முடிவு பெறவில்லை. தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவப்பிரகாசர் அவரை மன்னித்து, “”இனிமேல் எனது குருநாதரைப் பற்றிக் குறையாகப் பேச வேண்டாம்” என்று எச்சரித்து அனுப்பினார்.
பின்னர், சிவப்பிரகாசர் தில்லையை அடைந்து கூத்தபிரானைப் போற்றி வழிபட்டு, “”நால்வர் நான் மணிமாலை”, “”சிவப்பிரகாசம்”, “”சதமணிமாலை” ஆகிய அருந்தமிழ் நூல்களை அத்தலத்தில் இருந்தபடியே இயற்றி முடித்தார்.

காஞ்சிபுரம் சென்று சில காலம் தங்கியிருந்தார் சிவப்பிரகாசர். அக்காலத்தில் அவர் இயற்றியதே “”பிரபுலிங்க லீலை”, “”சித்தாந்த சிகாமணி”, “”வேதாந்த சூடாமணி” ஆகிய நூல்கள். திருக்கூவம் தலத்தின் மீதுள்ள தலபுராணமும் இவர் பாடியதே.

பிறகு விருத்தாலத்திற்கு அழைக்கப்பட்டார். விருத்தாச்சலத்தின் தொன்மை பெயர் பழமலை. சிதம்பர பூபதி என்பவர் இத்தலத்தில் சிவப்பிரகாசருக்கு ஒரு திருமடம் அமைத்துக் கொடுத்து தமிழ்த்தொண்டு செய்யக் கோரினார். தமிழால் சிவத்தொண்டு புரியும் சிவப்பிரகாசர் அவ்வாறே அவ்வூரில் தங்கியிருந்து அத்தலத்து பெருமான் மீது “”பழமலைஅந்தாதி”, “”பிட்சாடன நவமணி மாலை”, “”பெரிய நாயகி விருத்தம்” ஆகிய நூல்களைப் பாடினார்.

“”திருக்காளத்தி புராணம்” என்னும் நூலை இயற்றிக் கொண்டிருந்த சிவப்பிரகாசர் அது முடியும் முன்பாகவே,
தனது முப்பத்திரண்டாம் வயதில் இறைவன் திருவடி எய்தினார்.


இராவணன் தமிழன்

இராவண்ணன் –

இரா – இரவு.

வண்ணன் – நிறம் பொருந்தியவன்.

இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள். பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணரமுடியவில்லை.

இராவணன் தமிழன் –

ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம். ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன. இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்துவருகிறது… இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.

ஆதாரத்தின் சுருக்கம் –

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப்படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம்[வானூர்தி] போன்றவற்றைக் கண்டுபிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே

ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004] குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

ராவண காவியம் –

ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது. கம்பனின் சொல்வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் தி.க வினரும் இதை கவணத்தில் கொள்வதில்லை.

இதன் சாராம்சத்தில்…

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.

எனக் குறிப்படப்பட்டுள்ளது.

இராவண காவியத்தை பற்றி மேலும் அறிய ராவணன் கதாநாயகனா காமக் கொடூரனா? படியுங்கள்.


சர்வம் சிவமயம்!

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க !
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க !
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க !

சைவ நெறி தளைத்தோங்க அமைக்கப்பட்ட வலைப்பூ இது. இந்த வலைப்பூவில் சிவனைத் தவிற எதுவும் இருக்காது. ஏனென்றால் எல்லாம் சிவனுள் அடக்கம்.

சம்போ சிவ சம்போ!.

– ஜெகதீஸ்வரன்.ந