Category Archives: சிவ தொண்டர்கள்

அகத்தியர் கதை – சித்தமெல்லாம் சிவமயம்

அகத்தியர்

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார்
என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும்  குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை  மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய
சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும்
உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள்
உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “*அகத்தியம்*” என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக்
கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம்
முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை
ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.

*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
**
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக்
கூறப்படுகிறது.


திருமுருக கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார்

பெற்றோரும் பிறப்பும் –

“அருள்மொழி அரசு’ என்றும் “திருப்புகழ் ஜோதி’ என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அவதரித்தார். செங்குந்த வீர சைவ மரபினர். தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். அன்னையார் கனகவல்லி அம்மையார்.

தமிழோடு தவழ்தல் –

வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். நன்னூல் முதலான இலக்கண நூல்களையும் தேவாரம், நளவெண்பா, ஒüவையாரது நூல்கள், திருப்புகழ்க் கீர்த்தனைகள் முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார். பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அதுதான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

இசைப் பயணம் –

வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது “இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கி கெüரவித்தார்கள்.

சொற்பொழிவு திறன் –

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி’ பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர்.

சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு “”இதுகாறும் இதனை அறிந்திலமே” என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள். “”வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன” என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள்.

சிறப்பியல்பு –

மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.

அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

தமிழ்த் திருப்பணி –

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

இயற்றிய நூல்கள் –

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார்.

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

எல்லாம் இலக்கியம் –

கவிதை, கட்டுரை, கதை, காவியம் ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும் இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர் கூறுவர். மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும் பிரசங்கங்களும் உபந்யாசங்களும்கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.

ஆன்மீகத்தில் ஞானம் –

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால், ஞானாசிரியராகவும், மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும் விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்.

மறைவு –

1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே தம்முடைய வழிபடு தெய்வமாகிய இளம்பூரணன் இணையடிகளில் இரண்டறக் கலந்து, பூதவுடல் நீத்துப் புகழுடம்பெய்தினார்.

சொற்பொழிவைக் கேட்க –

கேட்கக் கேட்கத் திகட்டாத சொற்பொழிவு நமது வாரீயாருடையது.

திருப்புகழ் அருளிய அருணகரிநாதர் பற்றி திரு முருக கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவைக் கேட்க இங்கு சொடுக்கவும்.


அருட்கவி – சிவப்பிரகாசர்

சைவ இலக்கியத்திற்கு அரும்பாடுபட்ட ஆன்மீக அறிஞர்களுள் முக்கியமானவர் சிவப்பிரகாசர். தமிழில் இவர் இயற்றிய “”பிரபுலிங்க லீலை” என்ற நூல், இன்றும் இவருக்கு பெருமை சேர்த்து வருகிறது.
இந்நூலுக்கு பல தமிழறிஞர்களும் சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட அன்பர்களும் உரை எழுதியுள்ளனர்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் பிறந்த சிவப்பிரகாசர், பிறகு பெற்றோருடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அப்போது அம்மலையில் வாழ்ந்த “”குருதேவர்” என்ற யோகியுடன் பழகி, பயின்று, ஞானதீட்சை பெற்ற சிவப்பிரகாசர், ஒருநாள் மாலை மலைவலம் (கிரிவலம்) செய்வதற்காகச் சென்றார். மனதுக்குள் ஒரு புது நூல் பாடலாக உருவெடுத்தது. மலை வலம் முடித்து வந்து ஒரே மூச்சில் ஒரு நூலை எழுதி முடித்தார். அதுவே, அண்ணாமலையார் புகழ்பாடும் சோணசைல மாலை.

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் என்பவர், தமிழ் இலக்கண அறிவுமிக்கவராக இருக்கிறார் என்று கேள்வியுற்று, அவரிடம் சென்று தமிழிலக்கணம் கற்றார் சிவப்பிரகாசர்.

பின்னர், திருச்செந்தூர் வந்து முருகப் பெருமானை வழிபட்டார். கோவிலை வலம் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த போலிப்புலவர் ஒருவர் சிவப்பிரகாசரைக் காட்டி, “”யார் இவர் ?” என பிறரிடம் விசாரித்தார். “”சிந்துபூந்துறை வெள்ளியம்பல வாணத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றவர்” என்று கூறினார், போலிப்புலவர்.
“”வெள்ளியம்பல வாணனுக்கே தமிழ் இலக்கணம் பற்றி ஒன்றும் தெரியாது. அவரிடம் பயின்ற இவருக்கு என்ன தெரிந்திருக்கும் ?” என்று ஏளனமாகக் கூறினார்.
சிவப்பிரகாசர் இதைக் கேட்டுக் கோபமுற்று,””நாமிருவரும் சொற்போர் புரிவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாம். தோற்றவர், வென்றவருக்கு அடிமை ! சம்மதமா ?” என்று வாதுக்கு அழைத்தார்.

சிலர் நடுவர்களாக அமர்த்தப்பட்டனர்.

இருவரும் பாடத் தொடங்கினர்.

சிறிது நேரத்துக்குள் சிவப்பிரகாசர் முப்பது பாடல்களைப் பாடி முடித்துவிட்டார். போலிப்புலவருக்கோ முதற்பாட்டு கூட முடிவு பெறவில்லை. தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவப்பிரகாசர் அவரை மன்னித்து, “”இனிமேல் எனது குருநாதரைப் பற்றிக் குறையாகப் பேச வேண்டாம்” என்று எச்சரித்து அனுப்பினார்.
பின்னர், சிவப்பிரகாசர் தில்லையை அடைந்து கூத்தபிரானைப் போற்றி வழிபட்டு, “”நால்வர் நான் மணிமாலை”, “”சிவப்பிரகாசம்”, “”சதமணிமாலை” ஆகிய அருந்தமிழ் நூல்களை அத்தலத்தில் இருந்தபடியே இயற்றி முடித்தார்.

காஞ்சிபுரம் சென்று சில காலம் தங்கியிருந்தார் சிவப்பிரகாசர். அக்காலத்தில் அவர் இயற்றியதே “”பிரபுலிங்க லீலை”, “”சித்தாந்த சிகாமணி”, “”வேதாந்த சூடாமணி” ஆகிய நூல்கள். திருக்கூவம் தலத்தின் மீதுள்ள தலபுராணமும் இவர் பாடியதே.

பிறகு விருத்தாலத்திற்கு அழைக்கப்பட்டார். விருத்தாச்சலத்தின் தொன்மை பெயர் பழமலை. சிதம்பர பூபதி என்பவர் இத்தலத்தில் சிவப்பிரகாசருக்கு ஒரு திருமடம் அமைத்துக் கொடுத்து தமிழ்த்தொண்டு செய்யக் கோரினார். தமிழால் சிவத்தொண்டு புரியும் சிவப்பிரகாசர் அவ்வாறே அவ்வூரில் தங்கியிருந்து அத்தலத்து பெருமான் மீது “”பழமலைஅந்தாதி”, “”பிட்சாடன நவமணி மாலை”, “”பெரிய நாயகி விருத்தம்” ஆகிய நூல்களைப் பாடினார்.

“”திருக்காளத்தி புராணம்” என்னும் நூலை இயற்றிக் கொண்டிருந்த சிவப்பிரகாசர் அது முடியும் முன்பாகவே,
தனது முப்பத்திரண்டாம் வயதில் இறைவன் திருவடி எய்தினார்.


பசிப்பிணி அகற்றும் வள்ளல் திருவருட் பிரகாச வள்ளலார்

சிவனடியார்கள் கதையை எழுத வேண்டும் என நினைத்த போது என் நினைவுக்கு வந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் திருவருட் பிரகாச வள்ளலார், இரண்டாமவர் காரைக்கால் அம்மையார், மூன்றாமவர் கண்ணப்பர்.

இவர்கள் மூவரும் நினைவுக்கு வர முக்கிய காரணம் ஒன்றுன்று அது,. பசி.

வள்ளல் பெருமான் பெருமை –

பதவுரை, பொருளுரை தேவைப்படாத எளிமையா பாடல்களை எழுதியவர்.

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்று பாடல்களில் நேர்மறை எண்ணங்களை புகுத்தியவர்.

கருணையின் உச்சமாக, ‘வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்’ என்று சொன்னவர்.

ஏனைய நாட்களிலும் பசியாற்றுவித்தல் நடந்தாலும், தைப்பூச திருநாள் அன்று வடலூரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பசியாற்றுவித்தல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

கோரமான பசியிலிருந்து மனிதனை காக்க சிவன் எடுத்த அவதாரமாகவே வள்ளலாரை சைவர்கள் கருதுகின்றார்கள்.

இராமலிங்க அடிகள் பிறப்பும் வளர்ப்பும் –

தில்லை எனப்படும் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில், சைவ தம்பதிகளான இராமையாபிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக அக்டோபர் 5, 1823 ல் பிறந்தார். இயற்பெயர் இராமலிங்கம். சபாபதி, பரசுராமர் என்ற அண்ணன்மார்களும், உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற அக்காமார்களும் உண்டு.

தாங்கள் சாப்பிடும் முன் அடியவர் யாருக்காவது உணவிட்டு மகிழ்வித்தல் சைவர்களின் பண்பு. வள்ளல் பெருமானின் அன்னை சின்னம்மாளும் தினமும் அடியவர்களுக்கு உணவிடுதலை வழக்கமாக கொண்டிருந்தார். நாளும் ஈசனை நினைத்து உருகும் குடும்பம் என்பதால் வள்ளலாருக்கு இளம் பருவத்திலேயே, பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் குணம் இருந்தது.

கல்வி –

மூத்த அண்ணன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தனர். சபாபதியே, தம்பி ராமலிங்கத்துக்குக் கல்வி கற்பித்தார். பிறகு, தான் பயின்ற காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயில அனுப்பினார்.

ஆசானான முருகன் –

ஒருகட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சியடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

ஒன்பது வயதில் –

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்துவந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம்.

அன்னையாக வந்தான் அர்த்தநாரி –


ஒரு நாள் வள்ளலார் மிகுந்த பசியோடு திண்ணையில் படுத்திருந்தார். தினம் தினம் அடியார்களுக்கு உணவு படைத்திடும் அன்னையின் குழந்தைக்கு பசியெடுப்பதனால், சிவனே அன்னையாக மாறி உணவு படைத்திட்டான்.

குழந்தைக்கு பசிக்குமேயென உண்மையான அன்னை வந்து உணவு படைக்க, அன்னையே இப்போது தானே உங்கள் கையால் உணவு உண்டேன் என இராமலிங்கம் தடுமாற, வந்தது உயிர்களுக்கெல்லாம் உணவு படைக்கும் ஈசன் என எல்லோருக்கும் புரிந்தது.

முதல் ஜோதி –

பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார்.

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.

அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந் தார். விளக்கில் ஒளி மங்கும்போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!

சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம் –

கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு ராமலிங்கம்
“சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.

கொள்கைகள் –

கடவுள் ஒருவரே.

கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.

சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.

மாமிச உணவை உண்ணக்கூடாது.

ஜாதி, மத வேறுபாடு கூடாது.

பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.

பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

பசியாற்றுவி்த்தல் –


எல்லா உயிர்களுக்கும் பசியாற்றுவிக்கும் ஈசனின் செயலை வள்ளலாரும் செய்ய எண்ணம் கொண்டார்.

கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867|ஆம் ஆண்டு, மே மாதம் 23&ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே “சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்தார்.


இராவணன் தமிழன்

இராவண்ணன் –

இரா – இரவு.

வண்ணன் – நிறம் பொருந்தியவன்.

இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள். பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணரமுடியவில்லை.

இராவணன் தமிழன் –

ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம். ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன. இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்துவருகிறது… இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.

ஆதாரத்தின் சுருக்கம் –

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப்படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம்[வானூர்தி] போன்றவற்றைக் கண்டுபிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே

ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004] குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

ராவண காவியம் –

ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது. கம்பனின் சொல்வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் தி.க வினரும் இதை கவணத்தில் கொள்வதில்லை.

இதன் சாராம்சத்தில்…

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.

எனக் குறிப்படப்பட்டுள்ளது.

இராவண காவியத்தை பற்றி மேலும் அறிய ராவணன் கதாநாயகனா காமக் கொடூரனா? படியுங்கள்.