திகம்பரர் கதை – சிவன் திருவிளையாடல்கள்

4 மறுமொழிகள்

திகம்பரர் = திக் + அம்பரம், திக்-திசை,அம்பரம்-ஆடை திகம்பரர் என்றால் ஆடை அணியாதவர் என்று பொருள்.

நான்காம் திருமரை -

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.

பொருள் -

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

கதை -

திகம்பர் காலில் விழும் முனி பத்தினிகள்

தவம் செய்த முனிவர்கள் கடவுளைப் பற்றிய சிந்தனையில்லாமல் என்று எண்ணி வாழ்ந்தனர். இதனால் அவர்களுக்கு அகந்தை ஏற்பட்டது. இந்த முனிவர்களின் ஆணவத்தை தடுத்து நிறுத்த முயன்ற சிவபெருமான் பிச்சை ஏற்கும் பிச்சாடணார் கோலத்தில் உருவெடுத்து முனிவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றார். பிச்சாடணார் உருவத்தில் வந்திருப்பது இறைவன் என்று அறியாமல் முனிவர்கள் இருந்தனர்.

முனிவர்களின் மனைவிகள் இறைவனுடைய பிச்சாடணார் கோலத்தில் மயங்கினர். தங்களை மறந்து பிச்சாடணார் பின்னால் செல்ல தொடங்கினர். இதனை கண்ட முனிவர்கள் பிச்சாடண முர்த்தியை அழிக்க அபிசார வேள்வி என்ற யாகத்தை செய்தனர். யாகத்தில் தோன்றிய புலியை இறைவன் மேல் ஏவினர். இறைவன் புலியை கொன்று புலித்தோலை ஆடையாக கட்டிக்கொண்டார்.

அதன் பிறகு முனிவர்கள் மானை ஏவினார்கள். இறைவன் அதை அடக்கி இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார்.

அதன் பிறகும் ஆத்திரம் கொண்ட முனிவர்கள் பாம்புகளை ஏவினர். சிவபெருமான் அவற்றை தனக்குரிய அணிகலன்களாக மாற்றி இடுப்பிலும், கழுத்திலும் அமைத்துக்கொண்டார்.

அதன் பிறகு முனிவர்கள் பூத கனங்களை ஏவினர். அவற்றை சிவபெருமான் தன்னுடைய படையில் சேர்த்துக் கொண்டார்.

இறுதியாக மிகப் பெரிய யானைகளை ஏவி விட… இறைவன் இந்த யானைகளின் தோலை உரித்து அதை தன்மீது போர்த்திக்கொண்டார்.

இதன் பிறகுதான் முனிவர்களின் ஆணவம் அடங்கியது. அவர்கள் பக்தி கண்களால் இறைவனைத் தேடினர். இறைவன் முனிவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சியளித்து அவர்களின் செருக்கை அடக்கினார்.

நன்றி -

கல்லிலே கலை வண்ணம் கண்டோம்.

அறப்பளீஸ்வரர் திருக்கோயில் – கொல்லிமலை

4 மறுமொழிகள்

இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது.

கொல்லிமலையின் புகழுக்கு வசந்த முலாம் பூசியது “கொல்லிப்பாவை’ தான். அசுரர்கள் வருகையை தடுத்து நிறுத்த மாயன் என்ற தெய்வ சிற்பி, பார்ப்போரை தன் அழகால் காமம் உண்டாக செய்து, மயக்கி கொல்லும் தன்மை உடைய பெண் படிமத்தை உருவாக்கியதால் இதற்கு “கொல்லிப்பாவை’ என்ற பெயர் அமைந்தது.

இந்த கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் கொண்டதாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை வீழ்த்திய வலிமை பெற்ற இவன், ஆட்சிபுரிந்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர்.

இந்த அறப்பள்ளியில் ஈஸ்வரர் எழுந்தருளியதால் அங்கு அறப்பளீஸ்வரர் கோயில் தோன்றியது. இதனால் இங்கு வல்வில் ஓரிக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.


“கொல்லி குளிர் அறைப்பள்ளி’ என்றும், “கள்ளால் கமழ் கொல்லி அறைப்பள்ளி’ என்றும் திருநாவுக்கரசர் இந்த கோயிலை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர் தனது திருத்தல கோவையில் அறைப்பள்ளியை போற்றியுள்ளார்.

கோயிலின் அருகில் பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, “”அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்” என்ற பெயர் வழங்கலானது.

இத்தனை சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோயில் கொல்லிமலையின் வளப்பூர் நாடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அறப்பளீஸ்வரர், தாயம்மை எனும் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இவர்களுடன் வினை தீர்க்கும் விநாயகரும், முருகனும் சன்னதி கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

தஞ்சை பெரிய கோயிலை தந்த, ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமாகிய மாதேவி, இந்த கோயிலுக்கு வந்து தரிசித்தும், விலையுயர்ந்த அணிகலன்களை அணிவித்தும் சென்றுள்ளது போன்ற ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.

இந்த கோயிலுக்கு சென்று வணங்கி, அருவியில் குளித்து உடலும் உள்ளமும் சிலிர்க்க இறைவனின் அருளையும், இயற்கையின் வனப்பையும் ஒருங்கே அனுபவிக்கலாம்.

கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களை எல்லாம் அள்ளி வந்து கொட்டும் நீர் அருவியாகி பின் ஆறாக ஓடுகிறது. இந்த ஆற்றில் ஏராளமான மீன்கள் உள்ளன.

அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன்பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர்.

மழையில்லாத காலங்களிலும் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆடிமாதம் 18ம் பெருக்கு இந்த கோயிலின் விசேஷமாகும். ஆண்டு தோறும் ஆடி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விழா சிறப்பாக நடந்து வருகிறது.

பக்தர்களோடு பழங்குடியின மக்களும், தங்களின் பாரம்பரிய சிறப்புடன் விழாவை கொண்டாடுகின்றனர். அவர்கள் ஆற்றில் உள்ள பெரிய மீன்களை பிடித்து அதற்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு பின்னர் அந்த மீனை மீண்டும் ஆற்றில் விடுகின்றனர். இந்த புனித தன்மை பெற்ற ஆறு, கொல்லிமலையில் இருந்து இறங்கி, துறையூர், முசிறி வழியாக சென்று காவிரியில் ஐக்கியமாகிறது.

ஆனாய நாயனார் – அறுபத்து மூவர் புராணம்

மறுமொழியவும்

முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப்பெருமான். இதைத் திருமுருகாற்றுப்படை எடுத்துக்கூறுகின்றது. பின் முருகனின் தாய் மாமனாகிய கண்ணன் குழல் ஊதி நம் துன்பம் துடைத்தார். மூன்றாவதாக ஆனாய நாயனார் குழல் ஊதி சிவபெருமானையே கவர்ந்து இழுத்தவர். சிவனைக் கவர்ந்ததால் என்றென்றும் சிவன் அருகிலிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றவர்.

சோழ நாட்டில் உள்ள ஊர் திருமங்களம். அந்த ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்தார் ஆனாயர். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். அப்போது வகை வகையாக மாடுகளை பிரித்து மேய விட்டுவிட்டு புலலாங்குழல் வாசிப்பார். இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும்.

இறைவனை வணங்குவதற்கு பல வழிகள் உண்டு. இங்கு தமது குழல் இசையால் இறைவனை கவர்ந்த ஆனாய நாயனார் பற்றி அறிவோம்.

லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்க்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம் என்ற திருத்தலம். பரசுராமர் சிவபெருமானை இங்குதான் வழிப்பட்டு பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார். ஆனாய நாயனார் இத்தலத்தில் ஆயர் குலத்தில் அவதரித்தார். ஏராளமான பசு மந்தைகள் இவரிடம் இருந்தன. ஆ என்றால் பசு என்று பொருள்படும். பசுக்களை மேய்க்கும் தொழிலை கொண்ட இவர், ஆனாயர் என்ற பெயர் பெற்றார். இவர் சிவனைத் தனது முழுமுதற்கடவுளாக கொண்டிருந்தார்.

ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவராக திகழ்ந்தார். பசுக்கூட்டத்துடன் சென்று அவை மேயும் பொழுது இவர் குழல் ஊதுவார்.

ஒருநாள் திருநீறு அணிந்துகொண்டு பசுக்களுடன் முல்லை நிலத்திற்கு செல்கிறார். அப்பொழுது கார் காலம் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசுகின்றது. அங்கு பூத்துக் குழுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவபெருமானை காணுகின்றார். எடுக்கின்றார் குழலை, ஐந்தெழுத்து மந்திரத்தை நமச்சிவாய என்று குழலோசையில் தருகின்றார். எங்கும் எதிர்ரொலிக்கின்றது. குழல்ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நிற்க்கின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நிற்க்கின்றன. ஆங்கே காணப்பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நிற்கின்றன. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நிற்க்கின்றன. காற்று நிற்க்கின்றது. மலர்கள் அசையாமல் நிற்க்கின்றன. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது.

தேவர்களும் அங்கே வந்துவிட்டனர். தில்லை நடராசப்பெருமான் வராமல் இருப்பாரா. அப்பனும் அம்மையும் விசுவ வாகனத்தில் காட்சியளiக்கின்றனர். உன் குழல் இசையை கேட்டேன். என்றும் இந்த இசையின் பத்தை எனக்குத் தரவேண்டும். என்று இறைவன் கேட்க, உடனே இறைவனடி சேர்ந்தார் ஆனாய நாயனார்.

அமர்நீதி நாயனார் – அறுபத்து மூவர் புராணம்

5 மறுமொழிகள்

அமர்நீதி நாயனர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.

வரலாறு -

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.

இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில் [2] உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார். அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் ‘நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

நீதி -
சிவனும் சிவனடியாரும் ஒன்றே!

சிவன் தமிழில் போட்ட கையெழுத்து

8 மறுமொழிகள்

‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரும், இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் எப்படி இவ்வெளிய நடையில், அழகு தமிழில் திருவாசகத்தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர்.

பேரருட்பெரியவர்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் 63 பேர். சமயக்குரவர் நால்வர்-அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆவர். திருவாசகம் செந்தமிழுக்கு அன்பு மறையாகவும், உயிர்ப்பிணிக்கு மருந்தாகவும் உள்ளது. அப்பர் சரியைக்கும், சம்பந்தர் கிரியைக்கும், சுந்தரர் யோகத்திற்கும், மாணிக்கவாசகர் ஞானத்திற்கும் உரியவராக எண்ணப்படுவர்.

‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
மாணிக்கவாசகர் மதுரைக்காரர். பெயர் வாதவூரர். மாணிக்கவாசகர் ஏறத்தாழ 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். இவர் ஐப்பசி விசாகத்தில் பிறந்தாரென கீழ்க்கண்ட செய்யுள் மூலம் தெரியவருகிறது.

சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாசகனார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே.
ஆதி சங்கரரைப் போல 32 ஆண்டுகளே வாழ்ந்தார் மாணிக்கவாசகர்.
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம்-இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி. – (மாணிக்கவாசகர் அகவல்)

அப்பருக்கு 81, வாதவூரர்க்கு 32, சுந்தரருக்கு 18, ஞான சம்பந்தருக்கு 16 வயதில் முக்தி.

வைகைகரையில் திருவாதவூரில் அமாத்தியர் எனும் அந்தணர் மரபில் சம்புபாதசிருதர், சிவஞானவதிக்குப் புதல்வராகத் தோன்றியவர். மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சர். தென்னவன் பிரமராயர் என்ற பட்டம் பெற்றவர்.

சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந்துள்ள செய்தி கேட்ட மன்னன், வாதவூரரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். வாதவூரர் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார். சோலை ஒன்றில் சிவாகமங்கள், வேதங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூரர் அங்கே சென்று, சிவனே குருநாதர் தோற்றத்தில் மரத்தடியில் வீற்றிருக்க, கீழே அடியார்கள் கூடியிருக்கும் காட்சியைக் கண்டு, பசுவைத் தேடிய கன்று போல் விரைந்து சென்று காலடியில் வீழ்ந்து வணங்கி, அருள் தர வேண்டினார்.

”அறை கூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பென்பு உருக ஓலமிட்டு” என்பார் மாணிக்கவாசகர்.
விண்ணவர் தேவர் மற்றவரிருக்க, குதிரை வாங்க வந்த வாதவூரரைத் திருப்பெருந்துறையில் சிவபெருமான் குருவாய்த் தோன்றி குருந்த மரத்தினடியில் அமர்ந்து தடுத்தாட்கொண்டு, தன் நீள் கழல்களைக் காட்டி ஸ்பர்ச, நயன, மந்திர தீட்சைகளை அளித்து மறைந்தார். வாதவூரரரை இறைவன் ‘மாணிக்கவாசக’ என அன்புடன் அழைத்தார்.

ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட, வாதவூரர், பாடிய முதல் அடி
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” .

அவ்விடத்தில், மதுரை மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டினார். பணத்தைத் திருப்பணிகளுக்கும், சிவனடியார்களுக்கும், மனத்தை சிவ வழிபாட்டிலும் கொடுத்த செய்தி கேட்ட மன்னன், மாணிக்கவாசகரைத் திரும்பி வருமாறு பணித்தான். மாணிக்கவாசகர் சிவன் கொடுத்த மதிப்பில்லா மாணிக்கமொன்றை அரசனிடம் அளித்து, “ஆவணித் திங்கள் மூல நாளில் குதிரைகள் வரும்” என்றார்.

பின்னர் அது பொய்யென்றறிந்த மன்னன், அவரைச் சிறையிலடைத்தான். சிவபெருமான் குதிரை வணிகனாகச் சென்று, நரிகளைப் பரிகளாக்கி அரசனிடம் கொடுத்தார். அவை, இரவில் மீண்டும் நரிகளாகி, மற்ற குதிரைகளையும் கடித்தன. இதனால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை சுடுமணலில் கல்லேற்றி நிறுத்தினான்.

ஆண்டவன் வாங்கிய பிரம்படி
இதையறிந்த இறைவன் வைகையைப் பெருக்கி, மதுரையை வெள்ளத்தில் அமிழ்த்தி அச்சுறுத்த, அரசன் கரையை அடைக்க மக்களை ஏவினான். சிவபெருமான் கூலியாளாக, வந்தி எனும் பிட்டு வாணிச்சிக்கு உதவ வந்து, பிட்டை வாங்கிக் கொண்டு, கரையை அடைக்காமல், உறங்கியதால் அரசனிடம் பிரம்படி பட்டார். அடித்த அடி, அண்ட சராசரங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் பட்டது. அடியாருக்காக அடி வாங்கிய இறைவன் வெள்ளத்தைக் குறைத்து மாணிக்கவாசகரின் பெருமையை உணர்த்தி, மறைந்தருளினார்.

உண்மையை உணர்ந்த மன்னனிடம் விடைபெற்ற அடிகள், மதுரையிலிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களைத் தரிசித்து, மனம் கசிய திருப்பதிகங்கள் பல பாடினார். திருவாசகத்தில் 51 பகுதிகள் உள்ளன. இவற்றுள் 20 பகுதிகள், திருப்பெருந்துறையில் பாடப் பட்டன. இலங்கையிலிருந்து வந்த புத்தர்களை வாதில் வென்று, இலங்கை மன்னனின் ஊமை மகளைப் பேசச் செய்தார். அவள் வாயிலாகப் புத்தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லவைத்தார்.

ஆன்மிக வரலாற்றுச் சிறப்புகள்

* இறைவன் மனிதனுக்குச் சொன்னது ‘பகவத்கீதை’ – பகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு அருளியது.
* மனிதன் இறைவனுக்குச் சொன்னது ’திருவாசகம்’ – மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டி எழுதியது.
* மனிதன் மனிதனுக்குச் சொன்னது – திருக்குறள் – திருவள்ளுவர் படைத்தது.

இத்தருணத்தில் வேழமுகத்தோன் விநாயகப்பெருமான், தன்னுடைய தந்தத்தை உடைத்து வேத வியாசருக்காக, மகாபாரதத்தை எழுதியதையும் நினைவு கொள்க.

கைச்சாத்து
திருவாசகப் பாடல்கள் அதுவரை ஏட்டில் எழுதப்படாமலிருந்தன. திருவாசகத்தின் தேனினுமினிய தீந்தமிப் பாக்களைக் கேட்டு சொக்கிய மதுரைக் கடவுள் சொக்கநாதர், இப்புண்ணிய பூமியில் அந்தணனாய் உருக்கொண்டு மணிவாசகரைக்கண்டு, பாடல்களை எழுதிக்கொள்ள வேண்டினார். மாணிக்கவாசகர் இசைந்தருள, அட்சர லட்சம் பெறும் ஒவ்வொரு பாக்களையும் தம் அருள்புரியும் திருக்கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதினார். பாவை பாடிய வாயால் கோவை பாடுமாறு மீண்டும் இறைவன் வேண்ட, அவரும் பாடினார். இறைவன் விடைபெற்று, ’மாணிக்கவாசகர் சொற்படி அழகிய சிற்றம்பலவன் எழுதியது’ எனக் கையொப்பமிட்டு, ஓலைச்சுவடிகளைத் தில்லைப் பொன்னம்பலத்தின் கருவறையில் பஞ்சாட்சரப்படியில் வைத்தார். மறுநாள் அடியார்கள் ஏட்டைக்கண்டு மாணிக்கவாசகரை அழைத்து பொருள் விளக்க வேண்ட, ”அம்பலவாணரே இதன் பொருள்” என்றருளினார். இறைவன் அருட்பேரொளியாகத் தோன்றி, அத்தாட்சி அளித்து மாணிக்கவாசகரைத் தம்மோடு சோதியில் இணைத்துக்கொண்டார். அன்று ஆனி மாமக நன்னாள்.

எவ்வுலகிலும், எக்காலத்திலும், எவருக்கும் இறைவன், தில்லைக்கூத்தன், இதுவரை கைச்சாத்து அளித்ததில்லை. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் திருவாசகத்தைக் கறந்த பால் கன்னலொடு, நெய் கலந்தாற்போல நமக்களித்த மாணிக்கவாசகர் ஒருவர் மட்டுமே, தாயிற்சிறந்த இறைவனால் கைச்சாத்துடன் நற்சான்றிதழ் பெற்ற மகாத்மா.

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்
இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலைகள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச்சிலைகள் இங்கு இல்லையே தவிர, இக்கோவில், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத கணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங்களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலகணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடையார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட்டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவபுரம் என்றும் வழங்கப் பெற்றுள்ளது. தற்போது கோவிலின் பெயராலேயே, ஊரும் அழைக்கப்பட்டுவருகிறது.

கோவிலின் சிறப்பு
தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோகாம்பிகை
தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்

புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமானுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப்பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ளன. ஆவுடையாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம்மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணிக்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாராதனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித்திருமஞ்சனத் திருவிழா நடக்கிறது.

ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக்கோவில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள்ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில்களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகிகளும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பர்.

பஞ்சாட்சர மண்டபம்
மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ்சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் மேல் தளத்தில் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்துவாக்கள் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கரநாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத்தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்துடன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்தஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண்டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங்கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற்கூரையான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கையில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.

மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பதமுடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக்கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக்கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.

நூலின் மகிமை
மற்றெந்த நூலையும் படித்து, சிந்தித்து அவ்வாசிரியரின் மனத்தைப் படம் பிடித்து ஒரு கட்டுரை எழுதிவிடலாம். திருவாசகத்தை மட்டும் படித்துக் கொண்டே இருக்கத்தான் மனம் விழைகிறது. திருவாசகத்தைப் படித்தலும் கேட்டலும் எப்போதுமே ஒரு இனிய அனுபவமாக இருந்துவருகிறது. திருவாசகத்தைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து எழுதினால் பல புத்தகங்களாக நிரம்பிவிடும். பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் இக்கட்டுரை.

“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” -
-வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் ஆளுடைய அடிகள் அருள்மாலை
மாணிக்கவாசகரின் உயர்ந்த பக்குவம்
மாணிக்கவாசகர் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டார். பணிவு, தன்னடக்கம், எளிமை ஆகியவற்றின் மறு உருவமாக இருந்தார். தன்னை நாயினும் கீழாகக் காட்டிக் கொண்டார்.

உதாரணங்கள்:
‘நாயினேனை நலமலி தில்லையுட்’
‘நாய்ச்சிவிகை ஏற்றினார்ப் போல’
“பிழைப்பு வாய்ப்பொன்று அறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி”

மேலும் ஒரு சாதாரண மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் வெளிக்காட்டி, பசி, தூக்கம், பெண் மயக்கம், ஆகியவற்றிலிருந்து தன்னை எப்படி இறைவன் காத்து, அருளினார் என்பதையும், மாயையிலிருந்து தன்னை விடுவிக்கும் படியும் மனமுருகி வேண்டிக் கொண்டார்.
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே”
“அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டோமே.”
“மண்ணி லேபிறந்(து) இறந்துமண் ஆவதற்(கு)
ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே”

அதேபோல், மறுபிறவியைக் கொடுத்து விடாதே எனவும் மறவாமல் கேட்டுக்கொண்டார். ஞானத்தைக் கொடுக்கும்படி கெஞ்சினார்.

கற்பனைக்கெட்டா வர்ணனை வளம் பெற்றவர் மாணிக்கவாசகர். இறைவனின் கருணையை வாழ்த்தும் அவருடைய பிரபலமான பாடல்:

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”

பொதுவாக, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர். மாணிக்கவாசகர், அதற்கு மாறாக, ஞானம் கிடைத்தவுடன் அப்பேரின்பத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.

“அருளதறிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரை புரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகம் ததும்ப
வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊந்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்ந்து நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது”

வீட்டுக்கொரு திருவாசகம் இருக்க வேண்டும். அன்பர்கள், மெய்யுருக்கும் திருவாசகத்தைப் படித்தின்புற்று மனம்கசிந்து மெய்ஞானப்பாதையில் முன்னேற தில்லைக்கூத்தன் அருள்புரிவாராக.

நன்றி -
அம்மன் தரிசனம்.

மகிமைமிக்க திருநீறு

மறுமொழியவும்

சைவ நெறியினை பின்பற்றுவோரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றுதான் இந்த திருநீறு. சிவச் சின்னங்களில் ஒன்றாக வைத்தும் போற்றப்படுகிறது.
இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகக்கும், கிரமததுவங்களுக்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது.

மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகள் சிந்தனை , சொல், செயல் என்ற திரி சத்தியங்களை உணர்த்த்வதாக அமைகிறது. வாழ்வின் முடிவில் யாவரும் சாம்பல் ஆவர் என்ற நிலையான உண்மையையும் திருநீறு உணர்த்துகின்றது.

திருநீறு பூசிய அடியாரை சிவனாகவே கருதுவது சைவர்கள் இயல்பு, உடம்பெல்லாம் உடம்பெல்லாம் உவர் மண்ணாகிவரும் வண்ணாரை சிவனடியாராக பாவித்து தரையில் விழுந்து வணங்கியர் சேர வேந்தரும், நாயன் மாரில் ஒருவராக போற்றப்படும் சேரமான் பெருமாள் நாயனார்.

மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் புற வேதமாகிய திருநீற்றுக்காகவே உயிரைக் கொடுத்தவர்கள்.

மதுரையின் கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்க்க திருநீற்றின் பெருமையை விளக்கி திருஞான சம்பந்தரும் திருநீற்றின் பெருமையை விளக்கி பதிகம் பாடியுள்ளார்.

இந்த வகையில்,

“கங்காளன் பூசும் கவசத்திரு நீற்றை
ங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்க வினைகளும் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே”

என்று தெய்வத் திருமூலரும் திரு நீற்றின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

உணர்வுடையார் உணர்க…

“ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு “

நன்றி -

சித்தர்கள் இராச்சியம்

அகத்தியர் கதை – சித்தமெல்லாம் சிவமயம்

4 மறுமொழிகள்

அகத்தியர்

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார்
என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும்  குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை  மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய
சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும்
உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள்
உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “*அகத்தியம்*” என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக்
கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம்
முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை
ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.

*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
**
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக்
கூறப்படுகிறது.

அதிபத்த நாயனார் – அறுபத்து மூவர் புராணம்

மறுமொழியவும்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் நினைவுக்கு வருபவர் அதிபத்தர். அதிபத்தர் என்பதனை அதிபக்தர் என்று சொல்லின் மருவாக கொள்ளலாம். அளவுக்கு மிகுந்த பக்தியினை சிவபெருமான் மீது கொண்டவர் என்று பொருள்.

அதிபத்தர்

வரலாறு -

அதிபத்தர், சோழ நாட்டில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினம் துறைமுகத்தில் வாழ்ந்து வந்தவர். மீனவச் சமூகத்தை சேர்ந்தவர். எனவே தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்லுவார். நடுக்கடலில் கிடைக்கும் முதல் மீனை “இது ஈசனுக்கு” என்று சொல்லி மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்.

மீன்களே கிடைத்திடாத காலங்களிலும், மிக அரிதாக கிடைக்கும் மீனையையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பட்டினியாக கிடப்பார். தலையே போயினும் தலை மீனை இறைவனுக்கு அளிக்கும் செயலை விடவே இல்லை.

ஒரு முறை மிகுந்த பஞ்சம் வந்தது. உறவுகள், நண்பர்கள் என எவருக்கும் மீன் கிடைக்கவில்லை. எல்லோரும் வருந்தினர். அந்தச் சூழ்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார் அதிபத்தர். கொண்ட கொள்கையை தவறவிடவில்லை. தினமும் ஒரு மீன் கிடைக்கும், அதை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி நாட்கள் சென்றாலும், தன்னுடைய பணியையும், பக்தியையும் அவர் விடவே இல்லை.

தினம் நிகழும் செயலைக் கண்ட சிவபெருமான், அன்று மீனுக்கு பதிலாக வைரம் போன்ற விலையுயர்ந்த மணிகள் பதித்த தங்க மீனை அதிபத்தருக்கு கிடைக்கச் செய்தார். அந்த மீனைக் கொண்டு உறவுகள், நண்பர்கள் என அனைவருக்கும் அதிபத்தர் உணவிடமுடியும். ஆனால் அதிபத்தர் தனக்கு கிடைத்த முதல் மீன் என்றே எண்ணினார். சிறிதும் தயங்காது அந்த பொன் மீனை கடலில் விட்டார்.

அடுத்தகனம் ஈசன் வானில் தோன்றி “பக்தா, கொண்ட கொள்கையில் எந்நாளும் நின்று என்னை மகிழ்வித்தாய். இனி என்னோடு இருக்கும் சிவனடியார்களோடு வந்து இணைவாயாக “என்று சொல்லி மறைந்து போனார்.

நீதி -

பக்தர்கள் எத்தொழிலைச் செய்யினும், எவ்வளவு துன்பம் அடைந்தாலும் தாம் கொண்ட தொண்டினை மட்டும் கைவிட மாட்டார்கள்.

நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம்

மறுமொழியவும்


திருமுகம்:

எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.

பனித்தசடை:

சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.

கங்கை:

இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.

பிறைசூடுதல்:

சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.

குனித்த புருவம்:

பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.

குமிண்சிரிப்பு:

அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.

பவளமேனி:

இறைவன் நீ வண்ணத்தான் நெருப்பை யொத்தவன். நெருப்புத் தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி – மலநீக்கி மாண்புறச் செய்யும் அருட்டிறத்தைக் குறிப்பது.

பால்வெண்ணீறு:

எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை சாம்பல்தானே! நீறு மற்றொன்றாக மாறி அழியாது. ஆகவே பால்வெண்ணீறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும் குறிக்கின்றது. தொழுதெழுவார் வினைவளம் நீறெழ இறைவன் நீறு அணிகின்றார். மேலும் செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவர் நெஞ்சையும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது.

நெற்றிக்கண்:

மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. இது சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.

நீலகண்டம்:

ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தருள் செய்யும் இறைவனின் நயத்தக்க நாகரிக நலனையும் பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது.

உடுக்கை:

தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது. பரநாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மையை இது காட்டுகிறது.

நெருப்பு:

இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு. உயிர்களின் பிறவித் தளைகளின் இளைப்பினை நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.

அபயகரம்:

அமைந்தகை காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.

வீசியகரம்:

யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு.

எடுத்த திருவடி:

இறைவனின் இடது திருவடி இது; அம்பிகைக்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.

ஊன்றிய திருவடி:

இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.

முயலகன்:

இது ஆணவ மலத்தைக் குறிப்பது. முத்தி நிலையில் உயிர்கள் மாட்டு ஆணவமலம் அடங்கிக் கிடப்பதைப் போன்று. முயலகனும் இறைவன் திருவடியின் கீழ், மாயாதே தன் சத்தி மாய்ந்து கிடக்கின்றான்.

தெற்குநோக்குதல்:

ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்பதற்காக தென்றற்காற்றின் மீதும் தென் தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் என நயம்படக் கூறுவார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.

இறைவனின் உடுக்கை – ஆக்கல்(சிருட்டி), அமைத்தகை – காத்தல் (ஸ்திதி), ஏந்திய அனல் – அழித்தல்(சம்ஹாரம்), ஊன்றிய திருவடி – மறைத்தல் (திரோபாவம்), எடுத்த திருவடி – முத்தி (அனுக்கிரகம்)

சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் அஸ்கோ பர்போலா தகவல்

மறுமொழியவும்

கோவை செம்மொழி மாநாட்டில் திராவிக் கடவுளான சிவனின் மைந்தன் முருகனையும், சிவனை ருத்திரன் எனவும் வழிபட்டிருப்பதை அறிஞர்கள் வெளியிட்டார்கள். அதைப் பற்றிய தொகுப்பு.

சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்கு மாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’ விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாநாட்டில் சமர்ப்பித்தார்.

அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூற முடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு, எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும், அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், கி.மு. 1100 -600ம் ஆண்டுகளில், வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.

வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது. சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள் வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன. வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’ என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும், சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும், ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள்.

இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று தெரியவருகிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர் பர்போலோ பேசினார்.

பழைய பதிவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 67 other followers